Skip to main content

Posts

(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)

நாம் தமிழர் இயக்கம் :     மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக  நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே,  நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...

உதிர்ப்பு

வாழ்வின் தகிப்பில் கொதித்து அடங்குகிறது உயிர் உலை மெல்லக்கீழிறங்கிக் குளிர்ந்து உரையும் குருதியின் திட்டில் படிகிறது என் ஓவியம் சிரிக்க மறுக்கும் இதழ்களில் இருந்து உதிர்கிறது ஒரு துளிப் புன்னகை உடலெங்கும் நமநமக்கும் தினவில் பெருக்கெடுக்கிறது உன்மத்தம் உக்கிரமாக உராய உராய செதில்களைப் போல உதிர்கிறது சிறுமை
மிருகப்பிரவேசம் அந்த விசித்திர  மிருகம் வந்தே விட்டது கொன்று குவித்து ரத்தம் சுவைத்த  சுவடுகள் உலர்ந்து உதிர்ந்து போனதாக நினைப்பு உதடுகளைச்  சப்பியபடியே அதன் அடுத்த உலாவைத்  தொடங்கி விட்டது வெறுப்பு அரசியலின் வீரதீர முழக்கத்துடன் தன் அகண்ட கனவை நனவாக்கும் பயணத்தையும் தான் தேசிய ஒருமைப்பாடு வந்தே மாதரம் ராணுவ பக்தி வீரர்களுக்கு அஞ்சலி என வசீகரமான அரசியல் ஒப்பனைகள் அனைத்தையும் புனைந்து வந்து  அரங்கேறிய அதன் நர்த்தனத்தை ரசிப்பதில் நமக்கு எந்த வெட்கமும் இல்லை தமிழில் வணக்கம்  சொன்னால் போதும் எவனும் நம் தலைவனாகி விடுவான் மற்றபடி  கர்ப்பிணிப் பெண்ணின் கருவறை பிளந்து பச்சிளம் சிசுவை அவள் கண்முன்னாலேயே கூறுபோட்ட குஜராத் குரூரம் குறித்தெல்லாம் நமக்கென்ன கவலை எங்கோ ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு நேர்ந்தது  அவள் என்ன  நம் சகோதரியா கதறவும் பதறவும் நமக்குத் தேவை இப்போது அரசியல் சுத்திகரிப்பு இனச் சுத்திகரிப்பைப் போல
தந்தை பெரியாரின் பிறந்த நாள்  (17.09.13)  நினைவாக.....  பெரியார் : தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை 1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா். அப்போது  நடைபெற்ற நீண்ட விவாதத்திற்குப் பின்னர் பெரியாரிடம் காந்தி கேட்கிறார். “உங்கள் கருத்து என்ன, இந்து மதம் ஒழிய வேண்டும், பிராமணர்கள் ஒழிய வேண்டும் என்பதாக நான் கருதலாமா?” அதற்கு, “இந்து மதம். அதாவது இல்லாத – பொய்யான – இந்த மதம் ஒழிந்தால் பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். இந்து மதம் இருப்பதால் பிராமணர்கள் இருக்கிறார்கள். நானும் தாங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது என்கிறேன்” என்று பதில் சொல்கிறார் பெரியார். ஏறத்தாழ பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் நடத்திய இயக்கத்தின் வேலைத்திட்டம் குறித்த எளிய விளக்கமாகவோ, பிரகடனமாகவோ இதனைக் கொள்ளலாம். பிராமண எதிர்ப்பு என்ற புள்ளியில் இருந்து தொடங்கிய அவரது இந்தக் கலகப் பயணம், மெல்ல மெல்ல மொழி, இனம், சமூகநீதி  என  ராஜபாட்டையாக விரிவடைகிறது. பெரியா...
பாழ் தலைகோதப் பயிர்களின்றித் தவிக்கும் காற்று மேய நிலமும் புல்லுமின்றி  அங்கும் இங்குமாய்ச் சில மாடுகள் மனிதர்களின் அரவம் தேடி வெயிலின் மூர்க்கத்துடன் இறுக்க முயங்கிக் கிடக்கும் வெறிச்சோடிய தெருக்களின் மௌனம் தெருமுனை வீட்டுத் திண்ணையில் யாருக்காகவோ எப்போதும் காத்திருந்து தேயும் மூதாட்டியின் காலத்தைச் சுற்றி அடர்ந்து படரும் தனிமை பாரதிராஜாக்களின் பரிவாரங்களை வரவேற்க பசுமையான கதைகளும் காட்சிகளுமின்றி பாழ்வெளியாய் உறைந்து கிடக்கும் எமது மண் நவீனத்தின் நிராகரிப்பில் நசிந்து துடிப்படங்கி மரணப் படுக்கையில் கிடக்கும் அதனை நினைவுகள் என்ற பெயரில் கீறும் எழுத்துகளில் பிணவாடை அடிக்கிறது
மான் கீழ்மையும், சிறுமையும், கயமையும் மண்டிய வனத்தின் பெருமூச்சில் திளைக்கிறது அந்த மான் வெறித்தபடி துள்ளி ஓடும் அதன் குழந்தைமை பார்த்துச் சிரிக்கிறது அந்தக் கொடும் வனம் உயிர்ப்புக்கும் சாவுக்குமான போராக நடக்கும் தன் வாழ்வைக் கொம்பு கொண்டு துரத்த முயலும் அதன் புள்ளிகளில் இருந்து பெருக்கெடுக்கிறது கருணை
காத்திருப்பு வரிபிறழ்ந்த எழுத்துக்களைப் போல் வானில் பறந்து செல்லும் புறாக்களின் கால்களில் எனக்கான ஒலை எதுவும் இல்லை... எத்தனையோ ஓலைகள்   அனுப்பியதாகச் சொல்லுகிறார்கள் எதுவும் வந்து சேரவில்லை சேதிக்காகக் காத்திருந்த காலம் எனைச் சுற்றிலும் புற்றாக வளர்கிறது நாக்கைத் துருத்தித் துளாவியபடி அதிலிருந்து வெளியேறி நீளும் பாம்புகளுடன் குடியிருக்கப் பழகிவிட்டேன் சுற்றிவளைக்கும் பாம்புகளின் மிருதுத்தன்மையில்   உடலும் மனமும் சுகம் கொள்கின்றன