(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)
நாம் தமிழர் இயக்கம் : மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே, நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...