(23.1.11 தினமலர் செய்திமலரில் பிரசுரமான கட்டுரை) நிலை குலைக்கும் விலை உயர்வு… இ ந்த மாதத்தில்மட்டும் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்திக்கொள்ளும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்ட பின்னர் இது எட்டாவது முறை. ஏற்கனவே வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி, விண்ணைத் தொட்டுத்தொட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் பின்னர் இனி கேட்க வேண்டாம். ஏறுமுகம்தான். விலை உயர்வு என்பது ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்த முடியாத முரட்டுக் காளையாய், அரசுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துகிறது. அது அரசே முன்னின்று நடத்தும் ஜல்லிக்கட்டாகவும் இருக்கிறது. ‘இப்படியே போனால் எங்கள் கதி என்னாவது’ என்ற சாமானியனின் கேள்விக்கு எந்த அரசியல் கட்சிகளிடமும் பதில் இல்லை. சாமான்ய மக்களை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று குற்றம் சாட்டும் பாரதிய ஜனதாவிடம் கூட, இதற்கான விளக்கம் இல்லை. விலை உயர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது குறித்து, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப் போவதாக...