1984ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த வரலாறு திரும்பி உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சியே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீடிக்கின்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இந்த முடிவு ஜெயலலிதாவுக்கும், அவரது அடிப்பொடிகளுக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கலாம். அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் விரும்பியவர்களுக்கு இது அத்தனை உவப்பானதாக இருக்க முடியாது. மாற்றம் என்ற உடன் அந்தச் சொல்லை முழக்கமாக முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட அரசியல் கட்சியைச் சொல்வதாக நினைத்து விட வேண்டாம். உண்மையான மாற்றத்தை விரும்பிய பலர், கட்சி அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, தீவிரமான கவலைகளோடு இந்தத் தேர்தல் கூத்துகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர், கோபத்துடனும் கொந்தளிப்புடனும் பேசுவதைப் பார்க்க முடிகிறது. “என்ன இந்த மக்கள் இத்தனை மோசமாக இருக்கிறார்கள்…. ஒரு செல்போனுக்கும் சில நூறு ரூபாய்களுக்குமா வாக்களிப்பார்கள்…” என வெதும்புகிறார்கள். நியாயமான ஆத்திரம்தான். எதிர்த்து நின்ற அத்தனை பேரும் இத்தனை மோசமாக ஈசல்களைப் போல விழுந்ததேன்? என்ற கேள்வி, அழுத்தமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அத்தனை பேரது மனதிலு...