(தாகம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரையின் முழுமையான வடிவம்... உடன்பிறப்புகள் கலைஞருக்கு எழுதுவதாக எழுதப்பட்டது) ‘அ ம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’ ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’ இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று ஒதுக்கிவிட முடியுமா? அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி. தமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பா...