அரசியல் பேசுவோம் -12 - தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)
1949ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி மாலை சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமை தாங்கினார். தலைவரின் முன்னுரைக்குப் பிறகு, ஏ.சித்தையன், என்.வி.நடராஜன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இரா.நெடுஞ்செழியன், மதுரை முத்து, கே.கே.நீலமேகம், சத்தியவாணி முத்து ஆகியோர் உரையாற்றினர். கே.கே.நீலமேகம் உரையாற்றிக் கொண்டிருந்த போது மழை தூறத் தொடங்கி உள்ளது. அண்ணா உரையாற்றத் தொடங்கிய போது, மழை கொட்டத் தொடங்கியது. ஆனாலும், அண்ணா பொழிந்த சொல்மழையில் லயித்திருந்த மக்கள் கூட்டம் சற்றும் கலையவில்லை. திராவிடர் கழகம் என்ற மரத்தின் ஒட்டுமாஞ்செடியாக முளைத்திருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று அப்போது கூறிய அண்ணா, அது வேறு, இது வேறு மரமல்ல, இரண்டில் இருந்தும் பூத்துக், காய்த்துக் கனியப் போவது ஓரே கனிதான் என்று உறுதிபடக் கூறினார். தந்தையுடன் பிணக்கு ஏற்பட்டுப் பிரிந்தாலும், அவருக்குப் பிடித்த தனயனாகவே தனது அரசியல் தனிக்குடித்தனம் தொடரும் என்பதை எந்தக் குழப்பமும் இல்லாமல், திமுகவின் தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்திலேயே தெள...