மாற்றி யோசிக்கலாமே……. ‘வ ரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடிஉயரும் குடிஉயரக் கோனுயர்வான்’ விவசாயம் எனும் உயிர்த்தொழிலின் அவசியத்தை உணர்த்த, தமிழ் மூதாட்டி ஔவை சொல்லி வைத்த அறவுரை இது. நவீனத்தின் பாய்ச்சலில், எத்தனையோ தொன்மங்களும், விழுமியங்களும் அர்த்தம் இழந்து வரும் நிலையில், ஔவையின் இந்த மூதுரை மட்டும், நம் மண்ணின் அறமாக இன்றும் நீடித்து வருகிறது. என்னதான் நவீனப் பொருளாதாரப் புலிகள் அதை இல்லை என அடிக்கப்பார்த்தாலும், இந்த நாட்டின் முதல் தொழிலாகவும், முழுத்தொழிலாகவும் விவசாயமே இன்றுவரை நிலைத்து வருகிறது. ஆனால், இயற்கையின் சுழற்சி அப்படியே நீடிக்கவில்லை. அதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புவி வெப்பமயமாதல் காரணமாக, பருவநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. வடமேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்கள் உரிய காலத்தில் தொடங்கி உரிய காலத்தில் முடிவது இல்லை. ‘பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்’ என்ற விவசாயப் பெருமக்களின் வழக்கு மொழி முன்னெப்போதையும் விட, அண்மைக்காலமாக மெய்யாகி வருகிறது. ஆண்டு தோறும், சம்பா பரு...