Skip to main content

Posts

Showing posts from March 22, 2011
ஒற்றைகளின் மரணம் குரல்களின் கூட்டம் பெரிதாய் ஒலிக்கிறது பெருகிவழியும் இத்திரளில் எதிர்த்திசை சுட்டி ஒற்றைகள் சில. முகத்திலறைந்தும் உமிழ்ந்தும் விரட்டிய பின்னரும்… தேடுதலற்றுத் திரும்ப மனமின்றி இலக்கை நோக்கி திமிறியபடியே முன்னேறி மூர்ச்சித்து மரிக்கும் ஒற்றைகள் குற்றுயிராய்த் துடிக்கும் அவற்றின் குவியல் மீது கம்பீரமாய் அணிவகுக்கும் குரல்களின் கூட்டம் குதிபோடும் பெருங்குரல்களின் கூச்சலிடையே பேரொலியாய் முணகும் ஒற்றையொன்று ‘மரணம் எமக்கல்ல’. மேனா.உலகநாதன்
சமரசம் எதுவும் சரியில்லாத பொழுது எல்லாம் சரிதான் வருவதாக சொன்னவன் போகிறான் போவதாகச் சொன்னவன் வருகிறான் புன்னகைக்குள் இருந்து சீறித்துளாவும் பாம்பின் நாவுகள் வெயிலோடு மழை... காலம் மாறிவிட்டதாக சொல்கிறார்கள் வெயிலும் மழையும் தொட்டுக் கொள்ளக்கூடாதா என்ன? வெயில் குளிர்கிறது மழை தகிக்கிறது எதுவும் சரியில்லாத போது எல்லாம் சரிதான். சிலந்தியிடம் சிக்கிய பூச்சியின் நியாயத்தை கேட்பவர் யார்? இப்போது படபடக்கும் பூச்சியைக் கண்டு பயம் கொள்கிறது சிலந்தி எதுவும் சரியில்லாத போது எல்லாம் சரிதான் சமரசங்களின் தாலாட்டில் சமர்த்தாய்த் துயில் கொள்கிறது சுயம். மேனா.உலகநாதன்