menaulaganathan’s poetry
__________________________________________________________________________________________
உலர்ந்து சிதறிக்கிடந்த சருகுகளுக்கு
எனை வரவேற்பதில் உவப்பில்லை
வேண்டா விருந்தாளியாகவே
அந்த வெளிக்குள் நுழைந்தேன்
பாதங்கள் படும்போதெல்லாம் விசும்பின
ஏன் இத்தனை காலம் வராமல் போனாய்?
பவளமல்லிச் செடியையும்
மல்லிகைப் பந்தலையும் மட்டும்
யாரோ பராமரிக்கிறார்கள் போலும்
மற்றவை…
பூச்செடிகளைப் பறித்தெறிவது
காலத்தால் முடியாத காரியமா என்ன?
முப்பது ஆண்டுகளுக்கு முன்
பூத்துக் குலுங்கிய மலர்களின் வாசனை
நாசிகளைத் தழுவியபோது நரம்புகள் கிளர்ந்தன
நினைவோடையின் அடிஆழப் படிமங்களில் இருந்து
கலங்கி மிதந்தது அவள் ஸ்பரிசம்
_________________________________________________________________________________

Comments
Post a Comment