Skip to main content

இ(எ)ப்போதும் ஏமாற்றம்தான்…

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் வரிகள், விவசாயிகளுக்கு தற்போதெல்லாம் பெரிய நம்பிக்கையைக் கொடுப்பதில்லை.
எத்தனை காலத்துக்கு வேண்டுமனாலும் மக்களை ஏமாற்றலாம் என்பதை நமது அரசுகள் மிகத்தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதே அதற்கு காரணம்.

2011- 12ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் மூலம், மத்திய அரசு தனக்கு இருக்கும் அந்த ‘புரிதல் தெளிவை’ மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 
விவசாயத்தை நம்பிக்கையூட்டும் வாழ்வாதாரத் தொழிலாக மாற்றுவதற்குரிய சிறப்பான எந்த அம்சமும், இடம்பெறாமலே இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்து முடித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி.

2011 – 12ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்க கூடிய ஒரே அறிவிப்பு, உணவு உறுதித் திட்டத்திற்கான மசோதா, நடப்பாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது மட்டும்தான் என்கிறார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

ஆனால், அதற்கான நிதி ஆதாரமே ஒதுக்கப்படாமல், எப்படி அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்கிறார் மற்றொரு பொருளாதர விமர்சகர். கடந்த 2010 – 11ம் ஆண்டு, உணவுப் பொருள் மானியத்துக்காக 60 ஆயிரத்து 599,53 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, தற்போதைய 2011 – 12ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அதனை  60 ஆயிரத்து 572.98 கோடி ரூபாயாக குறைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பின்னர் எப்படி, உணவு உறுதித் திட்டத்தை முறையாக நிறைவேற்ற முடியும்?

முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு விவசாயக்கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி செய்யவும் சக்தி இன்றி, அதற்கு உரிய விலையைப் பெறவும் வழி இன்றித் தவிக்கும் இந்திய விவசாயி, எங்கிருந்து தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவான்?

உணவு பதனிடும் தொழில் நுட்பத்தின் பக்கம் மத்திய அரசின் கவனம் முதல் முறையாகத் திரும்பி இருப்பது, இந்த பட்ஜெட்டில் தென்படும் ஓர் ஆறுதலான அம்சம் எனலாம்.

மற்றபடி, அடுத்த தலைமுறையினரை ஈர்க்கும் வசீகரம் மிக்க தொழிலாக விவசாயத்தை மேம்படுத்தும் எத்தகைய தொலை நோக்கு வியூகங்களும் மத்திய அரசிடம் இல்லை என்பது, இந்த பட்ஜெட்  அறிக்கை மூலம் மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

வேளாண் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்கள் யாரும் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பாத நிலையில், அவர்களை ஈர்ப்பதற்கான எந்த அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக இந்த பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருப்பது இங்கே கவனத்துக்குரியது.

வேளாண் படிப்பில் பட்டம்பெற்ற பெரும்பாலான இளைஞர்கள், ஏதாவது ஒரு நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுவதையே விரும்புகின்றனர்.
அவர்களின் இத்தகைய மனப்போக்கில் மாற்றம் ஏற்பட, விவசாயத்தை நாட்டின் முழுமையான ஆதாரத்தொழிலாக வளர்த்தெடுப்பதற்கான நேர்மையான முயற்சிகள் தேவை. அதனை நமது சரத்பவார் போன்றவர்களிடம் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என பல முறை வலியுறுத்தி உள்ளார். ஆனால், மத்திய அரசே, இதுவரை  அதனைச் செய்ய முன்வரவில்லை என்பதுதான் வேதனை.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் வழியில், ரயில்வேத்துறைக்கென்று தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதை தன் சிரமேற்கொண்ட கடமையாக கருதி நிறைவேற்றிவரும் மத்திய அரசு, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை, தனிப்பெருந்தொழிலாக இதுவரை அங்கீகரிக்கத் தயாரக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அண்மையில், கர்நாடக மாநிலத்தில், எடியூரப்பா தலைமையிலான அரசு, விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
17 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருப்பதன் மூலம், அத்துறையின் அடிப்படையான பிரச்சனைகளில் அம்மாநில அரசு மிக அழுத்தமாக தன் கவனத்தைச் செலுத்தி உள்ளது.

அதனைப் புரிந்து கொள்ள கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டின் சில அம்சங்கள் இதோ….

·        நவீன உணவுப் பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை.

·         சுவர்ண பூமி திட்டப்படி 10 லட்சம் விவசாயிகள் குடும்பங்கள் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

·         கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஒரு சதவகித வட்டியில் கடன்.

·         இயற்கை உர விவசாய வளர்ச்சிக்கு ரூ.200 கோடி.

·         உயிரி எரிபொருள் திட்ட மேம்பாட்டுக்கு ரூ.125 கோடி.

·         விவசாயக் கருவிகள் மானியத்துக்கு ரூ.100 கோடி.

·         நிலத்தின் உயிர்ச்சத்தை மேம்படுத்துவதற்கான பூ சேத்தனா திட்டத்துக்கு ரூ.40 கோடி.

·         விவசாய அடிப்படை கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்குதல்.

·         விவசாய மின் இணைப்புகளை பலப்படுத்த ரூ.3,900 கோடி ஒதுக்கீடு.

·         ஏரிகளைத் தூர்வாரவும், அதில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவும்
ரூ.1000 கோடி.

·         உயர் கல்வி படிக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு வட்டி இல்லாத
கடனுதவி.

·         2011 முதல் 2020-ம் வரையிலான ஆண்டை நீர்ப்பாசன ஆண்டாக அறிவித்து நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ.50 ஆயிரம் கோடி திரட்டுதல்.

என இன்னும் பல அம்சங்கள்....

கர்நாடக மாநில அரசின் பட்ஜெட்டை தமிழகத்தில் பட்டியலிட்டு என்ன செய்ய என்று நீங்கள் கேட்கலாம்.

தமிழகம் உட்பட மற்ற மாநில அரசுகளும் இதனைப் பின்பற்றலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

மத்திய அரசு மரபணு மாற்ற விவசாயத்தை ஆதரிக்கும் நிலையில், கர்நாடக மாநில அரசு, இயற்கை வேளாண்மைக்கும், நிலத்தின் உயிர்ச்சத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்குகிறது.

இதில் இருந்தே மாநில அரசுகள், வேளாண்மைக்கென்று தனிக்கொள்கையையும், நிதி நிலை அறிக்கையையும் வகுப்பதில் உள்ள அனுகூலம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இளைஞர்கள் ஏற்கும் தொழிலாக விவசாயத்தை மாற்றுவதற்கான திட்டத்தோடு, மண்வளத்தைப் பாதிக்காத வேளாண்முறையையும் அதன் மூலம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை,  கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.

தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில அரசுகளும் ஏன் இதனைப் பின்பற்றக்கூடாது?

மேனா. உலகநாதன்

நன்றி தினமலர் - செய்திமலர்

Comments

Popular posts from this blog

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...

(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)

நாம் தமிழர் இயக்கம் :     மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக  நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே,  நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

  சிந்தனையாளன், 7, பிப்ரவரி 2017 அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர். திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார். மருத்துவச் சேவை ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை ம...