Skip to main content
30-1-11 தினமலர் - செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளியான கட்டுரை

விவசாய வளர்ச்சி என்பது…?
நாட்டின் உற்பத்தித் தேவையை நிறைவு செய்ய, மற்றுமொரு பசுமைப்புரட்சி தேவை என்று குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டு இருப்பது, இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

வேலை இல்லாத்திண்டாட்டத்தை ஒழிப்போம்…..

வறுமையை விரட்டுவோம். ….

தீவிரவாதத்தை வேரறுப்போம்…..

பொருளாதார வளர்ச்சியில் இரண்டு இலக்கப் புள்ளியை எட்டுவோம்…

கடந்த அறுபது ஆண்டுகளாக பொதுப்புத்தியில் உரைய வைக்கப்பட்டுள்ள இது போன்ற ஏகோபித்த பிரகடனங்களை, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் குடுயரசுத்தலைவரோ, பிரதமரோ நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் வெளியிடுவது ஒரு சடங்காக நீடித்து வருகிறது.

அவற்றில் ஒன்றுதான் பசுமைப்புரட்சி தேவை என்று குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ள புளித்துப் போன பழங்கருத்தும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உணவு உறுதித் திட்டத்தை விரிவு படுத்தும் முயற்சி… என உற்பத்தி சார்ந்த பல்வேறு நெருக்கடிகளை மத்திய அரசு சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், குடியரசுத் தலைவர் தமது உரையில் மற்றுமொரு பசுமைப் புரட்சி தேவை என்று கூறியிருப்பது, யதார்த்தமாக நடந்த ஒன்றல்ல.

உற்பத்தியைப் பெருக்க நமக்கு இருக்கும் ஒரே வழி பசுமைப்புரட்சிதான் என மக்கள் மனதில் அழுத்தமாக பதியவைக்கும் முயற்சி என்றே அவரது இந்த பேச்சைக் கருத வேண்டி உள்ளது.

ஏன் பசுமைப் புரட்சி தேவை?

இந்தக் கேள்விக்கு, ‘உற்பத்தியைப் பெருக்க…. உணவுப் பஞ்சத்தைப் போக்க…’ என்ற பழைய காரணத்தைத் தான், ஆட்சியாளர்கள் தற்போதும் முன்வைக்கப்போகிறார்கள்.

அதனை முற்றிலும் மறுக்க முடியாது என்றாலும், பழைய பசுமைப்புரட்சியால் இந்த மண் பட்ட புண்ணே இன்னும் ஆறாத நிலையில், புதிய பசுமைப்புரட்சிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து நாம் கவலை கொள்ளாதிருக்க முடியாது.

பழைய பசுமைப் புரட்சி மண்ணில் இருந்த மணிச்சத்தை வேதி உரங்களால் உறிஞ்சி, மகசூலை அதிகரிக்க உதவியது. ஆனால், உறிஞ்சப்பட்ட மணிச்சத்தை மீண்டும் உள்ளீடு செய்து, மண்ணின் உயிர்த்தன்மையைப் பாதுகாப்பதற்கான எந்த முயற்சியையும், பசுமைப் புரட்சியாளர்கள் செய்யவில்லை.

மாறாக, பாரம்பரியமான இயற்கை உரங்களும், விதை ரகங்களும், பசுமைப்புரட்சியின் நவீன உற்பத்தித் தொழில்நுட்ப பசிக்கு இரையாகிப்போயின.

வரப்புகளிலும், வயல்வெளிகளிலும் இயற்கை உரங்களுக்கான இழைதழைகளைப் பயிரிட்டு, அவற்றை பயிரிடும் போது பயன்படுத்தும் பாரம்பரிய தொழில்நுட்பம் காலாவதியாகிப் போனது. குறுவை சாகுபடி என்ற பெயரால், எண்ணற்ற பழைய நெல்விதை ரகங்களையும் இந்த பசுமைப்புரட்சிதான் நம்மிடம் இருந்து களவாடிச்சென்றது.

இப்போது, மீண்டும் ஒரு பசுமைப்புரட்சி தேவை என்ற குரல் அதிகார மட்டத்தில் இருந்து எழுந்திருப்பது நம்மை அதிர்ச்சியுடன் அச்சமும் கொள்ள வைக்கிறது.
புதிய பசுமைப்புரட்சி எப்படி இருக்கும்?

பழைய பசுமைப்புரட்சி, விதைகளையும், உரங்களையும் இறக்குமதி செய்ததோடு நின்றது. புதிய பசுமைப் புரட்சி அதை விட பல மடங்கு ஆக்டோபஸ் பலத்தோடு வந்து இறங்குகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது விவசாய நிலங்கள் தாரைவார்க்கப்படும். பன்னாட்டு, விதைகள், உரங்கள், தொழில் நுட்பம் என அனைத்தும் களமிறக்கப்படும். எஞ்சி இருக்கும் மணிச்சத்தும். மண்ணின் அடிமடியில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும். பண்ணை விவசாயம் என்ற பெயரால் பெருமுதலாளிகள் கையில் தானியங்கள் குவியும். விவசாயிகள் என்ற வர்க்கமே கூட காணாமல் போகக்கூடும். கண்ணுக்குத் தெரிந்த இடமெல்லாம் விவசாய கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் பரப்பும். இந்நாட்டின் விவசாய குடிமக்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாறுவார்கள்.

இவையெல்லாம் வெறும் கற்பனை சார்ந்த அச்சங்கள் அல்ல. 

மாகாராஷ்டிர மாநிலத்தில், இதன் முன்னோட்டக் காட்சிகள் இப்போதே அரங்கேறத் தொடங்கி உள்ளன. அதன் விளைவுதான் கடந்த பத்தாண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் அங்கு தற்கொலை செய்து மடிந்தது.

மீண்டும் இப்படி ஒரு பசுமைப்புரட்சி தேவையா என்பதுதான் விவசாயிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ள கேள்வி.

சரி. பசுமைப் புரட்சி வேண்டாம் என்றால், உற்பத்தியை அதிகரிக்க அதற்கு மாற்றாக என்ன வழி இருக்கிறது?

உற்பத்தி அதிகரிப்பு என்பது இங்கே நெல், கோதுமை, அதிக பட்சமாக கரும்பு போன்ற பயிர்களின் அளவிலேயே பார்க்கப்படுகிறது. எப்போதாவது விலை ஏறும்போது வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் பக்கம் ஆட்சியாளர்களின் கவனம் செல்கிறது.

ஏன் நம்மிடம் மற்ற பயிர்கள் இல்லையா?

கம்பு, கேழ்வரகு, கடலை, உளுந்து, எள், துவரை… வாழை, தென்னை, பனை எலுமிச்சை, நாரத்தை… வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், அவரை, கொத்தவரங்காய்,  முட்டைகோஸ், மிளகாய், கொத்தமல்லி, வெற்றிலை, பாக்கு என இன்னும் எத்தனையோ பயிர்கள் இருக்கின்றன.

நெல்லுக்கும், கரும்புக்கும் மட்டுமே கொடுக்கப்படும் மானிய கடன்களை இந்த பயிர்களுக்கும் கொடுத்தால், தாமாக இவற்றின் விளைச்சலும் அதிகரிக்கும்.

அனைத்துப் பயிர்களின் விவசாயத்தையும் ஊக்குவிக்கும் வகையில் புதிய விவசாயக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற குரல் இப்போது பரவலாக எழத் தொடங்கி உள்ளது. அதன் மூலமாகத்தான் விவசாயத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நாம் எட்ட முடியும் என்றும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு மரபு ரீதியான விவசாயத் தொழில் நுட்பத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க அரசு முன்வர வேண்டும்.

புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு விவசாய வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுக்காமல், ஆண்டாண்டு காலமாக மண்ணோடு போராடி வாழ்கை நடத்தி வரும் அடித்தட்டு விவசாயிகளின் கருத்தையும் கேட்க வேண்டும் என்கிறார், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஆவாரன்.

இவர், 3 செமீ நீளமுள்ள பழை ட்யூப், பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட ரேசர் பிளேடு, மண்ணெண்ணெய் விளக்கு இவற்றைக் கொண்டு, பயிர்களுக்கு தேவையான நீரைத் தெளித்துப் பாய்ச்சும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார். அதனை இவரது பயிர்களுக்குப் பயன்படுத்தியும் வருகிறார். 

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும் கவலை தெரிவிக்கிறார். பாரம்பரிய விவசாயிகளின் இத்தகைய படைப்புத் திறனை அரசும் அதிகாரிகளும் மதிப்பதில்லை என்ற மனக்குறையையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

வறட்சியான நிலப்பரப்பை நம்பி உள்ள இந்திய விவசாயத்தை,  அதற்குத் தகுந்த நீர்ப்பாசனத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலமாக மட்டுமே வளர்த்தெடுக்க முடியும் என்கிறார் அவர்.

ஆனால் நமது ஆட்சியாளர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஏற்றுமதியை ரத்து செய்வது, வரியை தற்காலிகமாக ரத்து செய்வது, இறக்குமதியை அதிகரிப்பது இவை தான்…

நெல், கோதுமை மட்டும் இன்றி பாரம்பரியமாக விளையும் அனைத்துப் பயிர்களுக்கும் உரிய விலை, நியாயமான விலையில் இடுபொருள், தேவையான பாசனவசதி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தால், விவசாயத்தைப் பொறுத்தவரை ஒருங்கிணைந்த வளர்ச்சியை எளிதில் எட்ட முடியும் என்பது நமது விவசாயிகளின் அடிப்படையான நம்பிக்கை.

மற்றுமொரு பசுமைப்புரட்சிக் கனவுகாண்பதை விட்டுவிட்டு, நமது மண்ணையும், மனிதர்களையும் காக்கும் எளிய பாரம்பரிய விவசாய அணுகுமுறைகளை மீட்டெடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  அது மட்டுமே, விவசாயத்தில் நாம் அடையக்கூடிய உண்மையான ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க முடியும்.

மேனா.உலகநாதன்



Comments

Popular posts from this blog

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...

(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)

நாம் தமிழர் இயக்கம் :     மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக  நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே,  நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

  சிந்தனையாளன், 7, பிப்ரவரி 2017 அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர். திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார். மருத்துவச் சேவை ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை ம...