Skip to main content
ப.சிதம்பரத்தின் ‘பயங்கர’ நினைவாற்றல்!

‘என் நினைவு கூறுவதில் இருந்து, 2010ம் ஆண்டில் தமிழக மீனவர் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை’

கடந்த வாரம் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன இந்த வார்த்தைகள், ஏற்கனவே வெந்து நொந்து போயிருக்கும் தமிழக மீனவர்களின் மனப்புண்ணில் வேலைப் பாய்ச்சி வேதனைப்படுத்துவது போல் ஆகிவிட்டது.
ப.சிதம்பரம் பட்டும் படாமல் சொன்ன அந்த சொற்கள், தமிழக மீனவர்கள் மத்தியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளன.

 ‘அவர் மத்திய அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவர் பிறந்தது தமிழ் நாட்டில் தானே. அந்த அடிப்படையிலாவது அவர் தமிழக மீனவர்களின் பிரச்சனையில் கருணையும், கரிசனமும் காட்டக்கூடாதா? இலங்கைக் கடற்படையினரிடம் அடியும், உதையும் பட்டு, உடமைகளை இழந்து, ரத்தக் காயத்துடன் உயிர் பிழைத்தால் போதும் என அன்றாடம் கரைக்கு வந்து சேரும் தமிழக மீனவர்களின் கண்ணீரும், கதறலும் அவர் காதுகளில் விழவே இல்லையா? அவர் நினைவு ஏன் இத்தனை பெரிய பொய்யைக் கூறுகிறது’ என்ற அவர்களது குமுறலில் நியாயம் இருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை மட்டும், தமிழக மீனவர்கள் மீது 42 முறை இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறுகின்றனர் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தமிழக மீனவர்களின் கை முறிந்துள்ளது.
ஜூலை மாதம் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 3 படகுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக மீனவர்களின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

அதே மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 நாட்டுப் படகுகள் சேதப்படுத்தப்பட்டதுடன், மீனவர்களின் மண்டை உடைக்கப்பட்டு, கை முறிந்துள்ளது.

செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு படகுகள் சேதமடைந்துள்ளன.

ஆகஸ்ட் மாதம் தமிழக மீனவர்களின் ஒரு படகே மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இது போன்று,  2010ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, கண்ணுக்குத் தெரிந்து 42 முறை தாக்குதல் நடந்திருக்கும் போது, ஒரு மத்திய உள்துறை அமைச்சர், அதுவும் தமிழர்,  இப்படி அலட்சியமாகப் பேசியிருப்பது என்ன நியாயம் என, அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு ப.சிதம்பரம் என்ன பதில் சொல்லுவார்.

‘நான் தமிழன் என்பதற்காக தமிழக மீனவர்களைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டுக்கொண்டிருக்க முடியுமா? இந்தியா முழுமைக்கும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு ஆயிரம் தலைவலி இருக்கிறது. இலங்கையோடு, இந்தியாவின் உறவைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால் சீனாவின் ஆக்கிரமிப்பு அங்கு அதிகமாகிவிடும். டெல்லிக்கு வந்த ராஜபக்சேவுக்கு விருந்து வைத்து,  அவருக்கு இன்னும் என்னென்ன தேவையோ அவ்வளவு உதவிகளையும் செய்ய நாங்கள் சித்தமாக இருப்பதாக தாஜா செய்து அனுப்பி இருக்கிறோம். அவரிடம் போய், எங்கள் மீனவர்களை உங்கள் கடற்படையினர் அவ்வப்போது தாக்கிக் கொன்று வருகிறார்கள். அதை நிறுத்துங்கள் என்று சொன்னால், அவர் சீனாவின் பக்கம் சாயக்கூடும். பின்னர் எங்கள் ராஜதந்திரம் என்னாவது? இந்தியாவின் பாதுகாப்பு முக்கியமா, இங்குள்ள சில மீனவர்கள் முக்கியமா?’ என்று மகாப்பெரிய பிரச்சனைகளை அவர் பதிலுக்கு முன்வைக்கக் கூடும்.

இத்தனை பெரிய பிரச்சனைகளைக் கையாண்டு கொண்டிருக்கும் ப.சிதம்பரத்திறகு, எங்கோ இருக்கும் தமிழக மீனவர்கள் என்ற சிறு கூட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து நினைவிருக்கும் என எதிர்பார்க்க முடியுமா?

அவரைப் பொறுத்தவரை புள்ளி விவரம் சரியாக இருக்கிறது. அரசின் ஆவணம் சொல்லும் தகவலின் படி, 2010ம் ஆண்டில் ஒரே ஒரு மீனவர் மட்டும்தான் கொல்லப்பட்டிருக்கிறார்.

அந்தப் புள்ளிவிவரத்தில், அன்றாடம் கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர், கண்மூடித்தனமாகத் தாக்குவதோ, நிர்வாணப்படுத்தி ஐஸ் கட்டிகளின் மீது படுக்க வைத்துச் சித்தரவதைப் படுத்துவதோ, படகுகள் சேதப்படுத்தப்படுவதோ, மீன்படி சாதனங்கள் பறிக்கப்படுவதோ இடம்பெறவில்லை.

அப்படி இருக்கும் போது இந்தப் பிரச்சனை பற்றி எல்லாம் அவர் எப்படி நினைவில் வைத்திருக்க முடியும். அதுதான் அவரது நினைவாற்றல், நிர்த்தாட்சண்யமாக இந்தப் பிரச்சனைகளை எல்லாம் மறந்து விட்டது. ஆக, இது நினைவாற்றல் செய்த குற்றமே தவிர, சிதம்பரத்தின் குற்றமல்ல.

‘மத்திய அரசைப் பொறுத்தவரை நாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் தான். எங்களது பிரச்சனைகளும்ம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமானவைதான். இது போன்ற தாக்குதலின் போது இலங்கை மீனவர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் ஒரு வேளை, மத்திய அரசு பதறக் கூடும்’ என்கிறார்கள் தமிழக மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள்.

மத்திய அரசின் மீது, தமிழக மீனவர்கள் கொண்டுள்ள இந்தக் கோபத்திற்கு நிறையவே காரணம் இருக்கிறது.

தமிழ மீனவர்களைப் போலவே, இலங்கை மீனவர்களும் எல்லை மீறி வந்து மீன்பிடிப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதுதான்.
ஆனால், அவர்களை இந்தியக் கடற்படையினர் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. எச்சரிக்கை, அல்லது கைது என்ற அளவில் மட்டுமே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

காரணம், இலங்கை மீனவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என, மத்திய அரசு, இந்தியக் கடற்படைக்கு அறிவுறுத்தி இருப்பதுதான்.
ஆனால், கச்சத்தீவுப் பகுதியிலும், அதனைத் தாண்டியும் சென்று மீன்பிடிக்கும், தமிழக மீனவர்களிடம், இலங்கைக் கடற்படையினர் எந்தக் கருணையும் காட்டுவதில்லை.

இலங்கை மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்படையை அறிவுறுத்தும் மத்திய அரசு, தமிழ மீனவர்களைப் பாதுகாக்க, இலங்கை அரசை வலியுறுத்தாதது ஏன் என்பதுதான், அவர்கள் எழுப்பும் கேள்வி.

இலங்கையில் கொல்லப்பட்டது போக எஞ்சியுள்ள தமிழர்களுக்காக ‘நீலி’க் கண்ணீர் வடித்து, பல ஆயிரம் கோடிகளைச் செலவிடத் தயாராக உள்ள மத்திய அரசு, தமிழக மீனவர்களின் உயிரை மட்டும் இப்படி, இலங்கைக் கடற்படைக்குத் தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம்?
ப.சிதம்பரம் போன்றவர்களின் நினைவாற்றல் இதற்குப் பதிலளிக்க மறுக்கலாம். மனச்சாட்சி?

மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர் 14.11.11 (நெல்லைப் பதிப்பு)


Comments

Popular posts from this blog

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...

(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)

நாம் தமிழர் இயக்கம் :     மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக  நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே,  நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

  சிந்தனையாளன், 7, பிப்ரவரி 2017 அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர். திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார். மருத்துவச் சேவை ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை ம...